Friday, 7 November 2014

பிறந்தநாள் வாழ்த்து



சிலபத்தாண்டே ஆயுள் கொண்ட - பனையோலையில்

    எழுத் தாணிவழி வடிக்கப்பட்டாலும்

பலபத்துநூறாண்டு வாழ்ந்து  - இணையத்தில்

    மின்ணனுப் பலகையின் வழி வடித்துக்கொண்டு

பற்பல்லாயிரமாண்டு வாழுந்தமிழை -பற்றியே


    வாழ்வாய் நீயும் பல்லாண்டு.



சக்தி-ப்ரியா

Monday, 3 November 2014

தஞ்சை பெரிய கோயிலும் இராஜராஜனும்

அந்தக் கோவில் கட்டுமானத்தில் சுடு செங்கல் இல்லை. மரம் இல்லை. சொறிகல் என்ற பூராங்கல் இல்லை. மொத்தமும் கருங்கல். நீலம் ஓடிய, சிவப்பு படர்ந்த கருங்கல். உயர்ந்த கிரானைட். இரண்டு கோபுரங்கள் தாண்டி, விமானம் முழுவதும் கண்களில் ஏந்திய அந்தக் கோவிலின் நீளமும், அகலமும், உயரமும் பார்க்கும்போது, வெறும் வண்டல் மண் நிறைந்த அந்தப் பகுதிக்கு இத்தனை கற்கள் எங்கிருந்து வந்தன, எதில் ஏற்றி, இறக்கினர், எப்படி இழுத்து வந்தனர், எத்தனை பேர், எத்தனை நாள், எவர் திட்டம், என்ன கணக்கு.

இந்தக் கருங்கற்களை செதுக்க என்ன உளி, என்ன வகை இரும்பு, எது நெம்பி தூக்கியது, கயிறு உண்டா, கப்பிகள் எத்தனை, இரும்பு உண்டெனில், பழுக்கக் காய்ச்சி உரமேற்றும் உத்தி (Heat Treatment) தெரிந்திருக்க வேண்டுமே. இரும்பை சூடாக்கி எதில் முக்கினர். தண்ணீரிலா, எண்ணெயிலா. நெருப்பில் கனிந்த இரும்பை எண்ணெயில் முக்கும் கலை, (oil quenching) ஆயிரம் வருடங்களுக்கு முன்பே உண்டா. எத்தனை பேருக்கு எவ்வளவு சாப்பாடு. அரிசி, காய்கறி எங்கிருந்து. சமையல் பாத்திரம் எத்தனை. படுத்துறங்க எங்கு வசதி. மறைவு வசதிகளுக்கு நீர்த்துறை எது.மனிதருக்கு உதவியாய், யானைகள், மாடுகள், குதிரைகள், கழுதைகள் உண்டெனில், அதற்கு உணவும், அவற்றைப் பழக்கி உபயோகப்படுத்துவோரும் எத்தனை பேர். அத்தனை பேரும் ஆண்கள் தானா. கோவில் கட்டுவதில் பெண்களுக்கும் பங்குண்டா. தரை பெருக்கி, மண் சுமந்து, பளு தூக்குவோருக்கு மோர் கொடுத்து விசிறிவிட்டு, இரவு ஆட்டம் ஆடி, நாடகம் போட்டு, பாட்டு பாடி, அவர்களும் தங்கள் பங்கை வழங்கியிருப்பரோ. இத்தனை நடவடிக்கையில், உழைப்பாளிகளுக்கு காயம் படாதிருந்திருக்குமா. ஆமெனில், என்ன வைத்தியம். எத்தனை பேருக்கு எவ்வளவு வைத்தியர். இத்தனை செலவுக்கும், கணக்கு வழக்கென்ன, பணப்பரிமாற்றம் எப்படி. பொன்னா, வெள்ளியா, செப்புக்காசா. ஒரு காசுக்கு எத்தனை வாழைப்பழம். என்னவித பொருளாதாரம். உணவுக்கு எண்ணெய், நெய், பால், பருப்பு, மாமிசம், உப்பு, துணிமணி, வாசனை அணிகலன்கள் இருந்திருக்குமா. பாதுகாப்பு வீரர்கள் உண்டா. வேலை ஆட்களுக்குள் பிரச்னையெனில், பஞ்சாயத்து உண்டா. என்ன வகை சட்டம். எவர் நீதிபதி. இவை அத்தனையும், ஒரு தனி மனிதன், ஒரு அரசன் நிர்வகித்தானா. அவன் பெயர் தான் அருண்மொழி என்ற ராஜராஜனா.யோசிக்க யோசிக்க, மனம் மிகப் பெரிதாய் விரிவடைகிறது. இது கோவிலா. வழிபாட்டுத் தலமா. வெறும் சைவ சமயத்துக்குண்டான கற்றளியா. இல்லை. இது ஒரு ஆற்றங்கரை நாகரீகத்தின் வரலாற்றுப் பதிவு. திராவிடம் என்று வடமொழியில் அழைக்கப்பட்ட தமிழ் மக்களின் அறிவுத் திறமைக்கு, கற்களால் கட்டப்பட்டத் திரை. காலம் அழிக்க முடியாத சான்றிதழ். காவிரிக்கரை மனிதர்களின் சூட்சம குணத்தின் வெளிப்பாடு. விதவிதமான கலைகளின், மனித நுட்பத்தின் மனத் திண்மையின் ஒருமித்த சின்னம். முப்பத்தாறு அடி உயர ஒற்றைக்கல், இருவர் கட்டிப்பிடிக்க முடியாத அகலம். இதுபோல பல கற்கள், முன்பக்க கோபுரங்களிலும் தாங்கு பகுதியாக இருக்கிறது.திருச்சிக்கு சற்று தெற்கே உள்ள கீரனூர் தாண்டி இருக்கிற நார்த்தாமலையிலிருந்து வந்திருக்கிறது. கிட்டத்தட்ட அறுபது கிலோ மீட்டர். எப்படி கொண்டு வந்தனர் இவ்வளவு பெரிய கற்பாறைகளை. பல்சகடப் பெரு வண்டிகள். பல சக்கரங்கள் பொருத்தப்பட்ட வண்டிகள், மாடுகள் இழுத்தும், யானைகள் நெட்டித் தள்ளியும் வந்திருக்கின்றன. அந்த வழியில் ஒரு ஆறு கூட இல்லை. மலை தாண்ட வேண்டாம். மணல் பகுதி இல்லை. சரியான, சமமான பாதை. வழியெல்லாம் மரங்கள். அந்த நார்த்தாமலையில், ஆயிரம் வருடத்துக் கோவிலும் இருக்கிறது. வெட்டிய இடத்திலேயே வேண்டிக் கொள்ள கோவில் கட்டியிருக்கின்றனர்.எப்படி மேலே போயிற்று. இத்தனை உயரம். விமானம் கட்டக்கட்ட, வண்டிப்பாதையை கெட்டியான மண்ணால் அமைத்திருக்கின்றனர். இரண்டு யானைகள் எதிரும், புதிருமாய் போவதற்கான அகலத்தில் கற்பலகைகள், மனிதர்களாலும், மிருகங்களாலும், மேலே அந்த சுழல் பாதையில் அனுப்பப்பட்டன. உச்சிக்கவசம் வரை வண்டிப்பாதை நீண்டது. அதாவது, கலசம் பொருத்தும்போது, விமானம் வெறும் களிமண் குன்றாய் இருந்திருக்கும். பிறகு...? மெல்ல மெல்ல மண் அகற்றப்பட்டிருக்கும். ஆயிரக்கணக்கானவர்கள் தினமும் மண் அகற்றி, தொலைதூரம் போய் குவித்திருக்கின்றனர். குவிக்கப்பட்ட இடம் இப்போதும் இருக்கிறது. "சாரப்பள்ளம் என்ற இடத்திலிருந்து சாரம் அமைத்து' என்று சொல்கின்றனரே... வாய்ப்பே இல்லை. அத்தனை உயரம் சாரம். கற்பாறைகளைத் தாங்கும் கனத்தோடு கட்டப்பட்டிருக்காது. சாத்தியமே கிடையாது. நொறுங்கி விழுந்திருக்கும். அப்படியானால் சாரப்பள்ளம். சாரம் போட, அதாவது மண்பாதை போட மண் தோண்டப்பட்ட இடம் பள்ளமாயிற்று. சாரம் போட தோண்டப்பட்ட போது உண்டான பள்ளம் சாரப்பள்ளம். இத்தனை மனிதர்கள் எப்படி. உழைப்பாளிகள் எங்கிருந்து.வேறெதற்கு போர்? பாண்டிய தேசம், சேர தேசம், இலங்கை, கீழ சாளுக்கியம், மேல சாளுக்கியம் என்று பரவி, எல்லா இடத்திலிருந்தும், மனிதர்களும், மிருகங்களும், பொன்னும், மணியும், மற்ற உலோகங்களும், அதற்குண்டான கைவினைஞர்களும் இங்கே குவிக்கப்பட்டிருக்கின்றனர். கோவில் கட்ட போரா; போர் செய்து ஜெயித்ததால் கோவிலா. இரண்டும் தான். சோழர்கள் போர் செய்யப் போகவில்லை எனில், பாண்டியர்கள் மேலை சாளுக்கியர்கள் போர் துவக்கி ஜெயித்திருப்பர். (வெகு காலம் கழித்து ஜெயித்தனர்.) எனவே, எதிரியை அடக்கியது போலவும் ஆயிற்று, இறைபணி செய்தது போலவும் ஆயிற்று. இது சோழ தேசத்து அரசியல் சாணக்கியம். கல் செதுக்க விதவிதமான சிற்பிகள். மேல் பகுதி நீக்க சிலர். தூண், வெறும் பலகை, அடுக்குப்பாறை செய்ய சிலர். அளவு பார்த்து அடுக்க சிலர். கருவறைக் கடவுள் சிலைகள் செய்ய சிலர் என்று பலவகையினர் உண்டு. உளிகள், நல்ல எக்கு இரும்பால் ஆனவை. பெரிய கல் தொட்டியில் எண்ணெய் ஊற்றி, பழுக்க காய்ச்சிய உளிகளை சட்டென்று எண்ணெயில் இறக்க, இரும்பு இறுகும். கல் செதுக்கும் கோவிலுக்குள், இப்படிப்பட்ட கல்தொட்டி இன்னும் இருக்கிறது. கயிறு, கம்பிகள் சிறிதளவே பயன்பட்டன. உயரப் பலகைகள் போட மண் உபயோகப்பட்டது.எல்லா ஊரிலிருந்தும், தஞ்சைக்கு உணவு தானியங்கள் வந்திருக்க வேண்டும். ஆடுகள் அனுப்பப்பட்டிருக்க வேண்டும். ஆடுகள் வளர்ப்பது ஒரு கலையாக, கடமையாக இருந்திருக்கிறது. "சாவா மூவா பேராடுகள்' என்ற வாக்கியம் வழக்கத்தில் இருந்திருக்கிறது. 96 ஆடுகள் இருப்பினும், அந்த ஆட்டுக் கூட்டம் குறையாது. குட்டி போட்டு வளரும். வளர்க்கப்பட வேண்டும். நல்ல மருத்துவமனைகள் கட்டப்பட்டிருக்கின்றன. விதவிதமான மருந்துப் பெயர்கள் பட்டியலிடப்பட்டிருக்கின்றன. அறுவை சிகிச்சை தெரிந்தவர்கள் இருந்திருக்கின்றனர். மருத்துவமனை சார்ந்த தொழிலாளர்கள் உண்டு. மருந்துக் கிடங்கு உண்டு. மூலிகை தேடி சேகரிப்போர் உண்டு. நீர் ஊற்றுபவர் உண்டு. கணக்கு வழக்குகள், ஓலைச் சுவடிகளில் பதிவு பெற்றிருக்கின்றன. துல்லியமான கணக்கு வைக்கப்பட்டிருக்கிறது. தானங்கள் கல்வெட்டாய், குன்றிமணி தங்கம் கூட பிசகாமல் செதுக்கப்பட்டிருக்கின்றன. இதைச் சொல்ல ஒரு ஆள். செதுக்க ஒரு ஆள். நேர் பார்க்க ஒரு ஆள். வீரர்களுக்குள் சண்டை நடந்ததெனில், பஞ்சாயத்து நடந்ததற்கான கல்வெட்டுகள் உண்டு.மாமன்னர் ராஜராஜன் கண்ட விற்போர் உண்டு. ஒண்டிக்கு ஒண்டி சண்டை செய்ய விட்டிருக்கின்றனர். (Duel). இதில் ஒருவன் தப்பாட்டம் ஆடி இருவருமே இறந்ததால், இருவரின் மனக்கேதமும் தீர்க்க, கோவில் விளக்கெரிக்க வேண்டி, யார் மனஸ்தாபத்திற்குக் காரணமோ, அவர்களுக்கு அபராதம் விதித்திருக்கின்றனர். 96 ஆடுகள் அபராதம். அதாவது, சாவா மூவா பேராடுகள். தஞ்சையிலுள்ள ஒரு கோவிலில் இக்கல்வெட்டு இருக்கிறது.கோவில் கட்டியாகி விட்டது. நிர்வகிக்க யார் யார். அவருக்கென்று வீடு ஒதுக்கி, வீட்டு இலக்கம் சொல்லி, பெயர் எழுதி, கல்வெட்டாய் வெட்டியிருக்கிறது. இடது சிறகு மூன்றாம் வீடு, நக்கன் பரமிக்கு பங்கு ஒன்றும், இடது சிறகு நான்காம் வீட்டு எச்சுமண்டைக்கு பங்கு ஒன்றும் என்று பல நூறு பெயர்கள் செதுக்கப்பட்டிருக்கின்றன. வீணை வாசிக்கும் ஆதிச்சன் இறந்தமையால், அவன் மகனுக்குப் பங்கு அரையும் என்று சம்பளம் குறைக்கப்பட்டிருக்கிறது. கோவில் பணியில் உள்ள எல்லா தொழிலாளர்கள் பெயரும், தொழிலும் எழுதப்பட்டிருக்கின்றன. அது மட்டுமல்ல, கோவிலுக்கு யார் தானம் தந்தனரோ, அவர்கள் தந்தது சிறு தொகையானாலும், பெரிய தொகையானாலும், தங்க ஆபரணமானாலும், கல்லில் வெட்டப்பட்டிருக்கிறது. முதல் தானம் ராஜராஜனுடையது. "நாங்கொடுத்தனவும், நம் அக்கன் கொடுத்தனவும், நம் பெண்டுகள் கொடுத்தனவும்' என்று கல்வெட்டு துவங்குகிறது. தான் மட்டும் இக்கோவிலைக் கட்டியதாய் ஒரு சிறு நினைப்பு கூட அந்த மாமனிதனுக்கு இல்லை. கோவில் கட்டிய இந்த மனிதர்கள் எப்படி இருப்பர். கொஞ்சம் தெரிய வருகிறது.விமானத்தினுள்ளே உயிர் ஓவியங்கள் உள்ளன. சட்டை அணிந்த தளபதிகள், பூணூல் அணிந்த அந்தணர்கள், இடுப்பில் பாவாடையும், மேல் போர்வையும் அணிந்த அரசிகள், இடதுபக்க பெரிய கொண்டையோடு, தாடியோடு மாமன்னர் ராஜராஜன், அலங்காரமான, மிக அழகான கறுப்பு, சிவப்பு, மாநிறம் கொண்ட தேவரடியார்கள் என்று அழைக்கப்பட்ட நடனமாதர்கள், சிதம்பரம் கோவில் நடராஜர், விதவிதமான முகங்கள்; ஒன்று போல் ஒன்று இல்லை. உயிர் ததும்பும் முகபாவங்கள். தட்டை ஓவியங்கள். ஆனால், தெளிவாகத் தெரியும் ஒரு உலகம். மாமன்னர் ராஜராஜனைக் கோவில் கட்டத் தூண்டியது எது. போரா கலைஞர்கள் செய்திறனா. இல்லை. பெரிய புராணம் என்ற திருத்தொண்டர் புராணம் முக்கிய தூண்டுதல். கோபுர வாசலில் உள்ள சுவர்களில், சிறிய சிறிய சிற்பங்கள் தெரிகின்றன. கண்ணப்ப நாயனார், பூசலார், கண்டேஸ்வரர் மன்மத தகனம் என்று, முக்கால் அடி உயர பதுமைகளைச் செதுக்கி வித்தை காட்டியிருக்கின்றனர். அடுத்த விநாடி குழந்தை பிறக்கும் என்ற தாயின் உருவம், மன்னர் முகங்கள், புராண காட்சிகள் எல்லாம், கோவில் கோபுரங்களில் உண்டு.இது என்னவித கோவில்- விமானம் உயரம். மிக உயரம். கோபுரங்கள் சிறியவை. இது ஆகம விதியா. புதிய சிற்ப சாஸ்திரமா. உள்ளே நுழைந்ததும் நந்தியை மனதால் அகற்றிவிடுங்கள். எதிரே உள்ள விமானம் தான் சிவலிங்கம். வானம் ஒரு சிவலிங்கம். விமானத்திற்குள் உள்ள வெளி ஒரு சிவலிங்கம். வெளிக்கு நடுவே கருவறையில் கருங்கல் சிவலிங்கம். எல்லாம் சிவமயம். இந்த விமானத்திற்கு மாமன்னர் ராஜராஜன் வைத்த பெயர், "தென்திசை மேரு!' உள்ளே கடவுள் பெயர் பிரகதீஸ்வரர். தமிழில் பெரு உடையார். வடக்கே உள்ள கைலாயத்தின் மீது காதல். கைலாயம் போகவில்லை. கைலாயத்தை இங்கே கொண்டுவந்துவிட்ட உடையார் பெரிய உடையார், இது போதுமா கடவுளைச் சொல்ல. ரொம்ப பெரிசு ஐயா கடவுள். கருவறைக்கு அருகே உள்ள துவாரபாலகர் கட்டுகிறார். பதினேழு அடி உயரம். அவர் கால், கதை, கதையைச் சுற்றி மலைப்பாம்பு. மலைப்பாம்பு வாயில் பெரிய யானை. அதாவது, யானையை விழுங்கும் பாம்பு. பாம்பு சுற்றிய கதை. கதையில் கால் வைத்த துவாரபாலகர், அவர் கை விஸ்மயம் என்ற முத்திரை காட்டுகிறது. உள்ளே இருப்பதை விவரிக்க முடியாது என்று கை விரிக்கிறது. விவரிக்கவே முடியாத சக்திக்கு, கடவுளுக்கு, தன்னாலான அடையாளம் காட்டியிருக்கிறார் மாமன்னர் ராஜராஜன். அதுவே பிரகதீஸ்வரம். அதுவும் விஸ்வரூபம், இன்றளவும்.- எழுத்துச் சித்தர் பாலகுமாரன்

Friday, 12 November 2010

தமிழில் பேசுவது அந்நியமா?



இன்றைய உலகப் பொருளாதாரத்தில் தன்னை இணைத்துக்கொண்டு, மேலைநாட்டு (பண்பாடு, மொழி) மோகத்தில் சிக்கி, நாளைய இளைஞர்சமுதாயத்திற்கு ஒரு மாய அழுத்தத்தை கொடுத்துக்கொண்டிருக்கும் இச்சமுதாய சூழல் மாற்றங்களில் உற்று நோக்கியவற்றை பதிக்க விரும்புகிறேன்.
இன்றைய கணிப்பொறி மற்றும் நிறுவன வர்த்தகம் சார்ந்த துறைகளில் மட்டும் அல்லாமல், நடுத்தட்டு சாமானிய இளைஞனும் “ஆங்கிலம்” என்ற மாய அழுத்தத்துக்கு ஆளாகின்றான்.  இதன் விளைவு, ”ஆங்கிலம் பேசுவது பெருமை” என்பது மாறி ”தமிழில் பேசுவது இழிவு” என்ற எண்ணத்திற்கு இத்தலைமுறையினர் பயனிப்பது உதாரணமின்றி உணரக்கூடிய  செய்தியாகும்.
ஆங்கிலத்தில் பேசுவது பெருமைதான் அதற்கு மறுப்பில்லை, ஆனால் தமிழில் பேசுவது, நல்ல தமிழ் சொற்களை பயன்படுத்துவது இழிவு என்ற சிந்தனை நம் தமிழ் சமூகத்தில் நிலைகொள்வது மிகவும் வருந்தவேண்டிய சூழல்.  நம் குழந்தைகள் நம்மிடம் (சமுதாயதில்)  இருந்தே சொற்களை தெரிவு செய்கின்றன. ஆதலால் (இன்றைய தலைமுறையினர்)  நம்மிடம்  நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் ஒரு தார்மீக பொறுப்பு கொடுக்கப்பட்டுள்ளது. கல்வி, பொருளாதாரம், அரசியல், பன்னாட்டு தொடர்புகள் என பல துறைகளிலும் தன் பொறுப்புணர்ந்து செவ்வனே செயற்பட்டுக்கொண்டிருக்கும் நாம் நம் மொழியியல் கடமையையும் உணர்ந்து செயல்பட வேண்டிய நிலை உள்ளது.
தாய்மொழியை மதிப்பெண்களுடனும், பொருளாதாரத்துடனும் ஒப்பிட்டு பார்க்கும் போக்கும் பெருகிக்கொண்டேதான் இருக்கிறது.  அதன் விளைவு சில பெற்றோரே பள்ளியில் கூட இரண்டாம் மொழி பாடமாக தமிழை தெரிவு செய்யாமல் ( பயிற்று மொழி ஆங்கிலம் என்பது நகர வாழ்வியலில் எழுதப்படாத சட்டமாகவே மாறிவிட்டது) இந்தியையும் பிரெஞ்சு மொழியையும் தெரிவு செய்து, தாய்மொழியின் சுவையைகூட உணர இயலாத ஊனமுற்ற தலைமுறையை உருவாக்குகின்றோம்.
நல்ல தமிழில் பேச முயற்சித்து அதை செவ்வனே இந்நாளும் செய்து வருகின்ற நடிகர் கமல் அவர்களின் மொழியியல் சார்ந்த எண்ணத்தை பாராட்டியே ஆகவேண்டும். அனைத்து கூட்டங்களிலும், நேர்காணல் நிகழ்ச்சிகளிலும் தமிழை இயன்றவரை கலப்பில்லாமல் பேசுவதை தன் முத்திரையாக கொண்டுள்ள அவருக்கும், இதுபோன்ற கருத்துக்களை எதிர்கொள்ளும் நிலை ஏற்ப்பட்டுள்ளது.
கமல் நேர்காணல் - இங்கே சொடுக்குக
தமிழகத்தில் தமிழனுடன் தமிழில் பேசுவது அந்நியமா ? என்ன அநியாயம்....!
புகழ் வெளிச்சத்தில் உள்ள நடிகரின் முயற்சி பலராலும் எளிதில் அறியப்படுகிறது. அது போன்ற முயற்சிகள், நாடு முழுவதும் பல்வேறுபட்ட சூழ்நிலைகளில் பல நண்பர்களால், மேற்கொள்ளப்பட்டு நடைமுறைபடுத்தப்பட்டு வருகின்றன.
பொறுப்புண்ர்ந்து செயற்படும் அனைத்து அன்பு நெஞ்சங்களுக்கும் பாராட்டுக்கள் !
மாற்று மொழியின் உண்மையான தேவையற்ற இடங்களில் (தனிப்பட்ட வாழ்வியலில்)  தமிழையே பயன்படுதுவோம்.
இச்சூழலில் இருந்துகொண்டே தான் இச்சூழலை மாற்றவேண்டும்.
கைகோர்ப்போம் நண்பர்களே !.

Tuesday, 7 September 2010

” கொரிய தமிழ் மொழித்தொடர்பு ”

” கொரிய தமிழ் மொழித்தொடர்பு ” என்ற தலைப்பில் உலகத்தமிழ் செம்மொழி மாநாட்டில், இரு அறிஞர்கள், ஆதாரங்களுடன் பறைசாற்றி  கூறியுள்ளனர். ஒருவர் ஜெர்மெனி ந. கண்ணன் அவர்கள் ஏனையவர் கொரியக் நாட்டு மொழியியல் அறிஞர் கிம் ஜூங் நாம். அவர்களது நேர்காணலை கீழுள்ள தொடுப்பில் காண்க. (ப. 77-79)
www.tamilheritage.org/old/text/ebook/chemozi_collection.pdf
அப்பா, அம்மா, நாள், நான், வா போன்ற பொதுவான சொற்கள் கொரிய மொழியில் இன்றும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
இவ்வறிஞர்களின் ஆராய்ச்சி பற்றி அறிந்து, என் கொரிய மொழி பயிற்சி வகுப்புகளில் சிந்தித்த போது மேலும் இரண்டு சொற்கள் கிடைத்தன. அவை மருவிய தமிழ் சொற்களாகவே கருதத்தோன்றுகின்றன.


1. மொக்கு - 먹다
’மொக்கு’ என்ற சொல் (கொரிய மொழியில் ”மொக்தா”)  பழந்தமிழ் இலக்கியங்களில் ‘வாய் நிறைய தின்னுதல்’ (எ.கா. பசியில் வாடிய ஒருவனுக்கு அறுசுவை உணவு கிடைத்தால் எப்படி தின்பானோ?) என்ற பொருளில் பயன்படுத்தப்பட்டுள்ளதாக குறிப்புகள் எடுத்துரைக்கின்றன. இன்றைக்கும் கூட “ என்ன மூக்கு முட்ட மொக்குனியா? “ என கேளியாக கேட்கும் வழக்கம் தமிழகத்தின் சில பகுதிகளில் இருக்கிறது.
தமிழ்ப் பெயர்களுக்கு “அன்” விகுதி போல கொரிய வினைச்சொற்களுக்கு “தா” விகுதி.  தமிழ் மொக்கு--> மொக்தா வாக திரிந்திருக்ககூடும்.

மொக்கித்தின்(னு)-தல் mokki-t-tiṉ-

, v. tr. < மொக்கு- +. To eat greedily in large mouthfuls; ஒருசேர விழுங்கி யுண்ணுதல். (W.)
முக்கு²-தல் mukku-

, 5 v. tr. cf. மொக்கு-. To eat in large mouthfuls; நிரம்ப வாயிற் பெய்து உண்ணுதல். பாசவன் முக்கி (புறநா. 63).
மூலம் : (தமிழ் லெக்சிகன்) இணைய தமிழகராதி.
먹다1 1.[음식을] eat, have, take, [상식(常食)으로] live on, feed on.
மூலம்: கொரிய- ஆங்கில இணையஅகராதி.


2. ஒல்லுதல் - 어울리다
”ஒல்லுதல்” என்ற தமிழ்ச்சொல் 어울리다 (ஒவுல்லிதா) என்று கொரிய மொழியில் அதே பொருளில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.  கீழுள்ள குறிப்புகள் சிந்தனைக்கு வலுவூட்டுவதாக அமைந்துள்ளது.
ஒல்லு-தல் ollu-

, prob. 5 v. [M. ollu.] intr. 1. To be able, possible, practicable; இயலுதல். ஒல்லும்வா யெல்லாம் வினைநன்றே (குறள், 673). 2. To agree; உடன்படுதல். பாசறை யல்லது நீயொல் லாயே (புறநா. 31, 6). 3. To be fit, suitable; தகுதல். கங்குற்போதி லீங்கு வந்திடுக தொல்லாது (கந்தபு. வள் ளியம். 162). 4. To combine, unite, join; பொருந்து தல். கானத் தொல்லும் பேரழல் (கந்தபு. ஆற்று. 7). 5. To occur, happen, take place; சம்பவித்தல். (W.)--tr. 1. To brook, tolerate; பொறுத்தல். ஒல் லுவ சொல்லாது (பரிபா. 12, 65). 2. To mend, as a net; to braitl, as a basket; ஒலைப்பெட்டி முதலி யன பொத்துதல். (W.)
மூலம் : (தமிழ் லெக்சிகன்) இணைய தமிழகராதி.
어울리다 1.
[어우르게 되다] associate (with), join (with), mix[mingle] (with), bear[keep] (a person) company, give (a person) one´s company, go[run] with.

2.[조화되다] become, match, suit, befit, go (well) (with), be becoming (to), harmonize (with), be suitable (to, for), be in keeping(with).
மூலம்: கொரிய- ஆங்கில இணையஅகராதி.


இவைகளும் கொரிய தமிழ் மொழித்தொடர்புக்கு சான்றாக அமைகின்றன.

பதினாரும் பெற்று....!

பதினாரும் பெற்று பெருவாழ்வு வாழ்க!
என்று பெரியோர் வாழ்த்தக் கேட்டிருக்கின்றோம்.

அந்த பதினாறு என்னவென்று ஒரு தொலைக்கட்சி நிகழ்ச்சியின் பங்கேற்பாளர் கூறக்கேட்டு பதிக்கப்படுகிறது.

1.  கல்வி
2.  அறிவு
3.  ஆயுள்
4.  ஆற்றல்
5.  இளமை
6.  துணிவு
7.  பெருமை
8.  பொன்
9.  பொருள்
10. புகழ்
11. நிலம்
12. நன்மக்கள்
13. நல்லொழுக்கம்
14. நோயின்மை
15.  முயற்சி
16.  வெற்றி


பதினாரும் பெற்று பெருவாழ்வு வாழ்வோமாக!

Friday, 16 July 2010

விளையாட்டாய் மருத்துவம்!


சித்த மருத்துவம் மற்றும் சித்தர்கள் பற்றிய தெளிவான புரிதல் சாமான்யர்களின் மத்தியில் இன்றும் இல்லாத நிலைதான் நீடித்துக்கொண்டிருக்கிறது. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு (திருவள்ளுவருக்கு) முன்னரே சித்தர்கள் இருந்துள்ளனர் என சில இலக்கிய குறிப்புகள் கூறுகின்றன.
இது தொடர்பாக என் நண்பனின் தாயார் கூரிய செவிவழிச்செய்தி ஒன்று என்னை மிகவும் கவர, அதை இந்த வலைப்பூவில் பதிவு செய்வதில் பெருமகிழ்ச்சியடைகிறேன்.
“ சித்தர்கள் பெரும்பாலும் பயணித்துக்கொண்டே இருப்பவர்கள். அவ்வாறு பயணம் செய்யும் போது குழந்தைகளிடம் மருத்துவக் குறிப்பு நிறைந்த பாடல்களை விளையாட்டு போல சொல்லிக்கொடுத்து சென்றுவிடுவர் என்பதுதான் “
இப்போது தனது ஐம்பதுகளில் வாழ்ந்துகொண்டிருப்பவர்களில் சிலர் சிறுவயதில் இந்த பாடலை பாடி விளையாடி இருக்கக்கூடும்.

“ காக்கா கருப்பக்கா
  கஞ்சிக்கு கடி நெல்லிக்கா
  பூப்பூ புளியம்பூ
 பொன்னாங்கன்னிக்கு தாழம்பூ “

காய்க்காத கருப்பைக்கு நெல்லிக்காயும், பூப்படைதல் தொடர்பான பிரச்சினைகளுக்கு புளியம்பூ மருந்தாகும் என்றும், பொன்னாங்கன்னி கீரையை தொடர்ந்து சாப்பிட்டு வர, பெண்கள் தாழம்பூ போன்ற மேனியை பெறுவர் என்ற மருத்துவக் குறிப்பும் அடங்கியுள்ளது.

”தத்தக்கா புத்தக்கா தயிரும் சோறும்
முட்டவந்தா எறுமை சோறு
பனிமலையில ஏரி கொடி நட்டுவந்த
வீரய்யா! உங்க அப்பா பேரு என்ன ?

முருங்கப்பூ....!

முருங்கப்பூவ தின்னவரே
முந்திரி சாற்றை குடிச்சவரே
பாவை கைய படக்குன்னு எடு!

எடுக்காவிட்டால்,

கோழிக்குடம்பை எடுத்து
குப்பைமேனிய எடுத்து
கூசாம கை எடுத்துக்கோ! “

தத்தக்கா புத்தக்கா சின்ன குழந்தைகளுக்கு தயிர் சோறு, அடங்காமல் அதிக முரட்டுத்தனமான குழந்தைகளுக்கு எருமை பாலும் எருமை தயிர் சோறு. அது குழந்தையை கொஞ்சம் மந்தமாக்கி நல்வழிப்படுத்த உதவும். பனிமலையிலே ஏறிகொடி நாட்டும் தைரியமும் ஆண்மையும் முருங்கப்பூவின் மகிமை, அதுபோல முந்திரிச்சாறு, கோழியின் கல்லீரல் மற்றும் குப்பை மேனிக்கீரை போன்றவை ஆண்களின் கலவி வாழ்க்கையில் சிறந்துவிளங்க உதவும். மற்றும் அவைகளை மிகவும் சோர்ந்து, சோம்பிக்கிடக்கும் குழந்தைகளுக்கு கொடுத்து சுறுசுறுப்படைய செய்ய இயலும் என்பதாக இந்த பாடல் அமைந்துள்ளது.

இந்த பாடல்களும் அதன் விளக்கமும் சித்தர்கள் பற்றியறிய வேண்டும் என்ற ஆர்வத்தை தூண்டுவதாக உள்ளது.
சித்தர்கள் பற்றி கீழ்கண்ட வலைப்பூவில் தோழி தொடர்ந்து பல செய்திகளை மிக எளிய நடையில் பதிப்பித்துவருகிறார்.



Wednesday, 7 July 2010

சிந்தனை செய் மனமே!

இந்த செயலை அந்த உண்மையான இறைவன் பரிசுத்த ஏசுவே விரும்பமாட்டார்! இது போன்ற செயலில் ஈடுபடும் என் கிருத்துவ உடன்பிறப்புகளே, குறைந்தபட்சம் உங்கள் மத சேவை அதை ஏற்றுக்கொள்ளும் இறைவனுக்கேனும் பிடித்தவகையில் இருக்கவேண்டும் அல்லவா ? இன்றைய காலகட்டத்தில் இது ஒரு தொழிலாகவே (profession) உருவெடுத்துள்ளது. இங்கு கொரியாவில் அது ஒரு தர்மசங்கடமாகவே உள்ளது கொரியவாழ் வெளிநாட்டவர்க்கு. வாரத்தின் இறுதிநாள் நிம்மதியான உறக்கத்தில் உள்ள நண்பகல் நேரத்தில் ஒலிக்கும் அழைப்பு ம்ணி. உண்மையிலேயே அவர்கள் மிகவும் கணிவானவர்கள், அதனால் தானோ என்னவோ நாம் குறிப்பாய் உணர்த்தும் செய்தியை அவர்கள் உணரவே மாட்டார்கள்.