Friday 12 November 2010

தமிழில் பேசுவது அந்நியமா?



இன்றைய உலகப் பொருளாதாரத்தில் தன்னை இணைத்துக்கொண்டு, மேலைநாட்டு (பண்பாடு, மொழி) மோகத்தில் சிக்கி, நாளைய இளைஞர்சமுதாயத்திற்கு ஒரு மாய அழுத்தத்தை கொடுத்துக்கொண்டிருக்கும் இச்சமுதாய சூழல் மாற்றங்களில் உற்று நோக்கியவற்றை பதிக்க விரும்புகிறேன்.
இன்றைய கணிப்பொறி மற்றும் நிறுவன வர்த்தகம் சார்ந்த துறைகளில் மட்டும் அல்லாமல், நடுத்தட்டு சாமானிய இளைஞனும் “ஆங்கிலம்” என்ற மாய அழுத்தத்துக்கு ஆளாகின்றான்.  இதன் விளைவு, ”ஆங்கிலம் பேசுவது பெருமை” என்பது மாறி ”தமிழில் பேசுவது இழிவு” என்ற எண்ணத்திற்கு இத்தலைமுறையினர் பயனிப்பது உதாரணமின்றி உணரக்கூடிய  செய்தியாகும்.
ஆங்கிலத்தில் பேசுவது பெருமைதான் அதற்கு மறுப்பில்லை, ஆனால் தமிழில் பேசுவது, நல்ல தமிழ் சொற்களை பயன்படுத்துவது இழிவு என்ற சிந்தனை நம் தமிழ் சமூகத்தில் நிலைகொள்வது மிகவும் வருந்தவேண்டிய சூழல்.  நம் குழந்தைகள் நம்மிடம் (சமுதாயதில்)  இருந்தே சொற்களை தெரிவு செய்கின்றன. ஆதலால் (இன்றைய தலைமுறையினர்)  நம்மிடம்  நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் ஒரு தார்மீக பொறுப்பு கொடுக்கப்பட்டுள்ளது. கல்வி, பொருளாதாரம், அரசியல், பன்னாட்டு தொடர்புகள் என பல துறைகளிலும் தன் பொறுப்புணர்ந்து செவ்வனே செயற்பட்டுக்கொண்டிருக்கும் நாம் நம் மொழியியல் கடமையையும் உணர்ந்து செயல்பட வேண்டிய நிலை உள்ளது.
தாய்மொழியை மதிப்பெண்களுடனும், பொருளாதாரத்துடனும் ஒப்பிட்டு பார்க்கும் போக்கும் பெருகிக்கொண்டேதான் இருக்கிறது.  அதன் விளைவு சில பெற்றோரே பள்ளியில் கூட இரண்டாம் மொழி பாடமாக தமிழை தெரிவு செய்யாமல் ( பயிற்று மொழி ஆங்கிலம் என்பது நகர வாழ்வியலில் எழுதப்படாத சட்டமாகவே மாறிவிட்டது) இந்தியையும் பிரெஞ்சு மொழியையும் தெரிவு செய்து, தாய்மொழியின் சுவையைகூட உணர இயலாத ஊனமுற்ற தலைமுறையை உருவாக்குகின்றோம்.
நல்ல தமிழில் பேச முயற்சித்து அதை செவ்வனே இந்நாளும் செய்து வருகின்ற நடிகர் கமல் அவர்களின் மொழியியல் சார்ந்த எண்ணத்தை பாராட்டியே ஆகவேண்டும். அனைத்து கூட்டங்களிலும், நேர்காணல் நிகழ்ச்சிகளிலும் தமிழை இயன்றவரை கலப்பில்லாமல் பேசுவதை தன் முத்திரையாக கொண்டுள்ள அவருக்கும், இதுபோன்ற கருத்துக்களை எதிர்கொள்ளும் நிலை ஏற்ப்பட்டுள்ளது.
கமல் நேர்காணல் - இங்கே சொடுக்குக
தமிழகத்தில் தமிழனுடன் தமிழில் பேசுவது அந்நியமா ? என்ன அநியாயம்....!
புகழ் வெளிச்சத்தில் உள்ள நடிகரின் முயற்சி பலராலும் எளிதில் அறியப்படுகிறது. அது போன்ற முயற்சிகள், நாடு முழுவதும் பல்வேறுபட்ட சூழ்நிலைகளில் பல நண்பர்களால், மேற்கொள்ளப்பட்டு நடைமுறைபடுத்தப்பட்டு வருகின்றன.
பொறுப்புண்ர்ந்து செயற்படும் அனைத்து அன்பு நெஞ்சங்களுக்கும் பாராட்டுக்கள் !
மாற்று மொழியின் உண்மையான தேவையற்ற இடங்களில் (தனிப்பட்ட வாழ்வியலில்)  தமிழையே பயன்படுதுவோம்.
இச்சூழலில் இருந்துகொண்டே தான் இச்சூழலை மாற்றவேண்டும்.
கைகோர்ப்போம் நண்பர்களே !.